சென்னை: இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை மாநிலத் திட்ட இயக்ககம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:- நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பணிபுரியும் ஆசிரியர்கள், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தரவுகளை மத்திய கல்வி அமைச்சகம் சேகரித்து அதற்கேற்ப முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த விவரங்கள் மத்திய அரசின் பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (யுடிஐஎஸ்இ) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
இந்நிலையில், 2024-25-ம் கல்வியாண்டுக்கான பள்ளி தொடர்பான தகவல்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்போது, பள்ளியில் பராமரிக்கப்படும் ஆவணங்களின் அடிப்படையில் மாணவர்களின் பொதுவான விவரங்கள், சேர்க்கை, பதிவு விவரங்கள், அவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள், ஆதார் எண் போன்றவற்றை மிகத் துல்லியமாகப் பதிவு செய்ய வேண்டும்.
இப்பணிகளை, பிப்ரவரி, 17-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதன்படி, ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறிய மாணவர்களின் விவரங்களையும் முடித்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைவில் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.