பெங்களூரு: தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட அசையும் சொத்துக்களை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள்கள் ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதை கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த 13-ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெ.தீபா, ஜெ.தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். அதில், ‘உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்.
எனவே, ஒரு மாதத்திற்கு இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது.’ என்று நீதிபதி மோகன் அதை ஏற்க மறுத்து, ‘இது இன்றோ நேற்றோ நடக்கும் வழக்கு அல்ல. இது 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட அசையும் சொத்துக்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் முடிவில் நீதிமன்றம் உறுதியாக உள்ளது.
சொத்துக்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கிறோம். வேண்டுமானால், தமிழகத்தில் உள்ள நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து பெற்றுக் கொள்ளலாம்,” என கூறி, விசாரணையை ஜனவரி 24-ம் தேதிக்கு தள்ளிவைத்து, அன்றைய தினம் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.