கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கார் ஷோரூமில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் ரூ.102 கோடி கறுப்புப் பணப் பரிமாற்றம் தெரியவந்தது. இதில், சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கும் தொடர்புள்ளதால், அவர்கள் வருமான வரித்துறையினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முஜீப் ரஹ்மான் என்பவர் ராயல் டிரைவ் என்ற பெயரில் கார் ஷோரூம் நடத்தி வருகிறார். மலப்புரம், கோழிக்கோடு மற்றும் எர்ணாகுளத்தில் இதன் கிளைகள் உள்ளன.
வருமான வரித்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ரூ.102 கோடி கருப்புப் பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சிலர் புதிதாக வாங்கிய சொகுசு கார்களை ஓரிரு வருடங்கள் பயன்படுத்தி, பின்னர் இங்கு விற்பனை செய்தனர். அதற்கு பதில் கணக்கு காட்டாமல் கருப்பு பணத்தை பெற்றுள்ளனர். மேலும், இங்கு கார்களை வாங்கி கறுப்பு பணத்தை செலுத்துகின்றனர்.
இந்த விவகாரத்தில் சினிமா நடிகர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால், அவர்கள் அச்சமடைந்துள்ளனர்.