புதுச்சேரி: மின் விபத்துகளால் பாதிக்கப்படும் மின் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என ஐ.டி.ஐ., பொதுநல சங்கத்தினர் மேற்பார்வை பொறியாளரை சந்தித்து வலியுறுத்தினர். புதுச்சேரி அனல்மின் நிலைய கண்காணிப்பு பொறியாளராக கனியமுதன் சமீபத்தில் பொறுப்பேற்றார்.
மின்துறை ஐ.டி.ஐ., நல சங்க தலைவர் அருள்மொழி, பொதுச்செயலாளர் ரவி, துணை பொதுச்செயலாளர் செல்வம் மற்றும் சங்க நிர்வாகிகள், கனியமுத்தனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, மின்வாரியத்தில் 750க்கும் மேற்பட்ட பொறியாளர் மற்றும் பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால் தற்போதுள்ள ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து மன அழுத்தத்துடன் பணிபுரிவதால் அடிக்கடி மின் விபத்துகளில் சிக்குகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மேட்டுப்பாளையத்தில் 2 பேர், சாரம் பகுதியில் 1 பேர் என மொத்தம் 3 ஊழியர்கள் மின் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதற்கு நிரந்தர தீர்வு காண காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊழியர்கள் அடிக்கடி மின் விபத்தில் சிக்குவதால், மின்வாரிய ஊழியர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.