சென்னை: கிளாம்பாக்கத்தில் கட்டப்படும் புதிய ரயில் நிலையம் மே மாதம் செயல்பாட்டுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தென் மாவட்டங்களில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகளில் வந்து இறங்கும் ஆயிரக்கணக்கான பயணிகளின் ரயில் போக்குவரத்து வசதிகள் பூர்த்தி செய்யப்படும். கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் 88 ஏக்கர் பரப்பளவில் ரூ. 393.71 கோடியில் கட்டி திறக்கப்பட்டது.
சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு செல்லும் 80 சதவீத அரசு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. ஆனால், இங்கு புறநகர் ரயில் நிலையம் இல்லாததால், இணைப்பு மின்சார ரயில் சேவை இல்லை. இதனால் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதையடுத்து கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் ரயில் நிலையம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையின் அடிப்படையில் வண்டலூர் ரயில் நிலையத்தை அடுத்த கிளாம்பாக்கம் ரயில் நிலையம் கட்டும் பணி கடந்த ஜன.2-ம் தேதி தொடங்கியது.
இந்த ரயில் நிலையம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டாலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. திட்டமிட்ட காலம் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. மேலும், மழைநீர் வடிகால் பணியிலும் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை மே மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. 3 தளங்கள் இருக்கும். இந்த நிலையத்தில் 12 பெட்டிகள் கொண்ட ரயில்கள் நிறுத்தப்படலாம்.
தற்போது, ரயில் நிலையம் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருவதால், இந்த ஆண்டு மே மாதம் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ரயில் நிலையத்திற்கு தென் மாவட்டங்களில் இருந்து நீண்ட தூர பேருந்துகள் மூலம் பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கிருந்து நகருக்குள் எளிதாகப் பயணிக்க மின்சார ரயில்கள் உதவும். தற்போது, கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை வர, பயணிகள் மாநகர போக்குவரத்து கழக பஸ்களை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அல்லது ஆட்டோக்களில் வண்டலூர் அல்லது ஊரப்பாக்கம் ரயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து மின்சார ரயிலில் செல்ல வேண்டும். இதற்காக பயணிகள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.