சென்னை: ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை:- சுற்றுச்சூழலுக்கும், மனித ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிக்கும் வகையில், கோனோகார்பஸ் மரத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதை ம.தி.மு.க சார்பில் வரவேற்கிறேன். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கோனோகார்பஸ் மரத்தின் மகரந்தம், காற்றில் பரவும் போது, நுரையீரல் தொடர்பான நோய்களான தும்மல், இருமல், மூச்சுத் திணறல், ஆஸ்துமா, அலர்ஜி போன்றவை ஏற்படுகிறது.
இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த மரங்களை நட தடை விதித்துள்ளது. மேலும், பொது இடங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ வளாகங்கள், அரசு நிலங்கள், குடியிருப்பு பகுதிகள், வன நிலங்களில் உள்ள கோனோகார்பஸ் மரங்களை அகற்ற தமிழக வனத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த நச்சு மரத்தை அகற்றிய பின், அந்த இடத்தில் நடவு செய்து வளர்க்க, பொதுமக்களுக்கு நாட்டு மரக் கன்றுகளை இலவசமாக வழங்கவும் அரசு முன்வந்துள்ளது.