இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்த தொடரில் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நிலையாக வாய்ப்பு பெறாதது பல இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஐபிஎல் தொடரில் கடந்த சில ஆண்டுகளாக நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடி வரும் கெய்க்வாட், இந்திய அணிக்காகக் கிடைத்த வாய்ப்புகளில் ஓரளவு சிறந்தது.
மேலும், தோனியின் நம்பிக்கையைப் பெற்று சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு 2023 ஆஸ்திரேலிய தொடரின் ஒரு போட்டியில் சதத்தை அடித்து 123 ரன்கள் குவித்தார். ஆனால் அதன் பிறகு அவர் இந்திய டி20 அணியில் இன்னும் வாய்ப்பு பெறவில்லை. இதனால் ரசிகர்கள் இந்திய அணி நிர்வாகத்தையும் பிசிசிஐயும் விமர்சித்து வருகின்றனர்.
இந்திய அணியின் துவக்க வீரர் இடத்தில் ஏற்கனவே ஜெய்ஸ்வால், சுப்மன் கில், அபிஷேக் சர்மா ஆகியோர் போட்டியில் இருப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். இந்நிலையில் சஞ்சு சாம்சன் திடீரென அடுத்தடுத்த சதங்களை அடித்து ஓப்பனிங் இடத்தை பிடித்துள்ளார். இதனால், ருதுராஜ் கெய்க்வாடுக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
அஸ்வின் கூறியதாவது, “இந்திய அணியின் டாப் ஆர்டர் நெருக்கமாக இருக்கிறது. ஜெய்ஸ்வால், கில், ருதுராஜ் ஆகியோர் போட்டியில் இருக்கின்றனர். அவர்களுக்கு ஒருநாள் அல்லது ஏதேனும் ஒரு ஃபார்மட்டில் விளையாடுவதற்கான திட்டம் உள்ளது. ருதுராஜ் கடந்த டி20 போட்டியில் மேக்ஸ்வெலை அடித்து நொறுக்கியுள்ளார். ஆனால் அப்போதிலிருந்து அவர் இன்னும் வாய்ப்பு பெறவில்லை. ஏற்கனவே அந்த இடத்திற்கு இரண்டு பேர் போட்டியிடுவதால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.”
மேலும், “சஞ்சு சாம்சன் இரண்டு சதங்களை அடித்து ஓப்பனிங் இடத்தை பிடித்துள்ளார். அவர் மிடில் ஆர்டரில் விளையாடி வந்தார். ஆனால் பெரிய ரன்கள் குவித்து தற்போது ஓப்பனிங் இடத்திற்கு வந்துள்ளார். இதனால், அவர் சிலபஸ்க்கு வெளியே இருந்து வந்துள்ளார். அபிஷேக் சர்மா சுமாராக விளையாடியதால் அழுத்தம் உண்டாகி இருந்தது. அவர் தற்போது ருதுராஜ் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதனாலேயே அழுத்தத்தின் கீழ் அதிரடியாக விளையாடியுள்ளார். அவர் கவலையின்றி சுதந்திரமாக விளையாடுங்கள் என்ற மெசேஜை இந்திய அணி நிர்வாகத்திடம் இருந்து பெற்றுள்ளார்” என்று கூறியுள்ளார்.