சென்னை: தவெக தலைவர் விஜய் 19 மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் துவங்கி ஓராண்டு நெருங்கும் நிலையில், மாவட்ட செயலர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
கடந்த ஆண்டு பிப்., 2ம் தேதி த.வெ.க. துவங்கப்பட்டது. அக்கட்சிக்கு மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் மட்டும் இருந்தனர். பல மாவட்டங்களில், மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்படாமல் உள்ளன. அதேபோல் மாநில நிர்வாகத்திலும், பல்வேறு பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் இருந்தன.
பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், த.வெ.க.,வின் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு கட்சி பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் விதமாக, கட்சி அமைப்பானது சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி மொத்தம் 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
முதற்கட்டமாக 19 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்டக் கழக இணைச் செயலாளர்கள், பொருளாளர்கள், 2 துணைச் செயலாளர்கள் , 10 செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.