ஸ்ரீநகர்: உலகின் மிக உயரமான காஷ்மீர் செனாப் ரயில் பாலத்தை வந்தே பாரத் ரயில் நேற்று வெற்றிகரமாக கடந்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கை ஜம்முவுடன் இணைக்க உதம்பூர்-ஸ்ரீநகர்-பாராமுல்லா ரயில் இணைப்பு திட்டம் 1999-ல் தொடங்கப்பட்டது. இந்த பாதையில் ரியாசி மற்றும் சங்கல்தான் இடையே செனாப் ஆற்றின் மீது உலகின் மிக உயரமான ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது.
செனாப் ரயில் பாலத்தின் உயரம் 359 மீட்டர் ஆகும். நீளம் 1.3 கி.மீ. இந்தப் பாலத்தில் 100 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்க முடியும். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பிப்ரவரியில் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாராமுல்லா ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில், புதிய வழித்தடத்தில் வந்தே பாரத் சொகுசு ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
அதன்படி தலைநகர் டெல்லியில் இருந்து கடந்த 24-ம் தேதி வந்தே பாரத் சிறப்பு ரயில் புறப்பட்டது. அன்று மதியம் ரயில் ஜம்மு சென்றடைந்தது. இதையடுத்து நேற்று காலை ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை இந்த ரயில் வெற்றிகரமாக கடந்தது. இதுகுறித்து, ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது:- ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு சாலை மார்க்கமாக செல்ல குறைந்தது 8 மணி நேரம் ஆகும். புதிய ரயில் பாதையில் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரை 3 மணி நேரத்தில் அடையலாம்.