அமெரிக்க அதிபராக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக கடந்த 20-ம் தேதி பதவியேற்றார். அதன்பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். நேற்றுமுன்தினம் புளோரிடாவில் இருந்து வாஷிங்டன் செல்லும் விமானத்தில் ஏர்ஃபோர்ஸ் ஒன்னில் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் பேசியது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு டிரம்ப், “நான் இன்று காலை அவருடன் நீண்ட நேரம் பேசினேன். அவர் அடுத்த மாதம், அநேகமாக பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருவார். இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது” என்றார். டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியுடன் திங்கள்கிழமை தொலைபேசியில் பேசினார்.

அவரது இந்தியப் பயணம் அவரது முதல் பதவிக்காலத்தின் கடைசி வெளிநாட்டுப் பயணமாகும். அவருக்கும் பிரதமர் மோடிக்கும் நல்ல உறவு இருக்கிறது. செப்டம்பர் 2019-ல் ஹூஸ்டனில் இரண்டு தனித்தனி பேரணிகளிலும், 2020 பிப்ரவரியில் அகமதாபாத்திலும் இருவரும் ஆயிரக்கணக்கான மக்களிடம் உரையாற்றினர். 2024 நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் அமோக வெற்றி பெற்ற பிறகு, அவருடன் பேசிய முதல் மூன்று உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர்.