தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பூவானம் ஊராட்சியை சேர்ந்த 12 குடும்பத்தினருக்கு காட்டாற்று பகுதியில் வழங்கப்பட்ட பட்டாவை மாற்றி அரசு புறம்போக்கு நிலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழர் தேசம் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் தமிழர் தேசம் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் தஞ்சை முத்துஜி, மாவட்ட இணைச்செயலாளர் சூர்யா ஆகியோர் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது பூவானம் ஊராட்சி. இப்பகுதியை சேர்ந்த மக்கள் விவசாயக்கூலி தொழிலாளர்கள். இங்குள்ள 12 குடும்பத்தை சேர்ந்த நிலமற்ற ஏழை விவசாய குடும்பங்களுக்கு நில ஒப்படை சிறப்பு திட்டம் 2006ன் கீழ் பட்டுக்கோட்டை வட்டாட்சியரால் காட்டாற்று பகுதியில் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
நீர் நிலைகளில் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பூவானம் ஊராட்சியில் காட்டாற்று பகுதியில் 12 குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. இங்கு இந்த பயனாளர்கள் வீடுகள் கட்டினால் பிற்காலத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்பு என்று அகற்றப்படும் நிலை உருவானால் இம்மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவர்.
ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்த இந்த மக்கள் மீண்டும் வீடுகள் கட்டுவது என்பது இயலாத காரியம். தினசரி கூலி வேலைக்கு சென்று தங்கள் வாழ்க்கையை நடத்தி வரும் இந்த 12 குடும்பத்தை சேர்ந்த குடும்பத்தினருக்கு பூவானம் ஊராட்சியில் பல்வேறு அரசு சார்ந்த நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதில் இவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.