சென்னையில் ஒரு லட்சம் குழந்தைகளில் 13.6 பேருக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு இருப்பது அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பான குழந்தை புற்றுநோய் பதிவேட்டை தொடங்கியது. இந்த ஆய்வில், மருத்துவர் ஆர். சுவாமிநாதன் மற்றும் மருத்துவர் வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து புற்றுநோய் பாதிப்பு தரவுகளை சேகரித்தனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதோடு, தொடர்ந்து கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வு, இந்திய அளவில் குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட முதல் மக்கள்தொகை அடிப்படையிலான புற்றுநோய் பதிவு என குறிப்பிடப்படுகிறது. சென்னையில் 1981 முதல் பொதுவான மக்கள்தொகையில் புற்றுநோய் தாக்கத்தை பதிவு செய்யும் சென்னை பெருநகர திசுக்கட்டி பாதிப்பு பதிவேடு (MMTR) அமைப்பு, குழந்தைகளுக்காக தனியான பதிவேட்டை 2022 முதல் செயல்படுத்த தொடங்கியது.
சென்னையில் உள்ள 17 முக்கிய மருத்துவமனைகளில் இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன. மருத்துவர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்காணித்து, புற்றுநோயின் தன்மை, அதற்கான சிகிச்சை முறைகள் போன்ற தகவல்களை பதிவு செய்தனர்.
2022-ஆம் ஆண்டில் மட்டும் 241 குழந்தைகளுக்கு புதிதாக புற்றுநோய் கண்டறியப்பட்டது. இதில் 139 ஆண் குழந்தைகளும், 102 பெண் குழந்தைகளும் அடங்குவர். ரத்தப் புற்றுநோய் அதிகமாக பாதித்திருந்தது. அதேபோல், நிணநீர் மண்டல புற்றுநோய், சார்கோமா (மென் திசு புற்றுநோய்), எலும்பு புற்றுநோய் போன்றவையும் சிறுவர்களில் காணப்பட்டன.
சென்னையில், மக்கள்தொகை அடிப்படையில் கணக்கிடும்போது, 10 லட்சம் குழந்தைகளில் 136.3 பேருக்கு புற்றுநோய் இருந்தது. ஆண் குழந்தைகளின் பாதிப்பு விகிதம் 10 லட்சத்துக்கு 152.7 ஆகவும், பெண் குழந்தைகளுக்கு 118.5 ஆகவும் இருந்தது. ஆய்வில் பதிவான 170 குழந்தைகளின் மருத்துவ ஆவணங்கள் முழுமையாகச் சரிபார்க்கப்பட்டன.
சிகிச்சைக்குப் பிறகு 71% குழந்தைகள் உயிருடன் உள்ளனர். அதில், 81% குழந்தைகள் புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர். சென்னையை தொடர்ந்து, தமிழக அரசு உடன் இணைந்து இந்த ஆய்வை முழு தமிழகத்துக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வு புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளை அடையாளம் காண்பதோடு, அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கும் நோக்கில் தொடரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.