இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த இந்தியா, டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது. அடுத்ததாக நடைபெற்ற டி20 தொடரில் இங்கிலாந்தை 4 – 1 என்ற கணக்கில் தோற்கடித்த இந்தியா ஆறுதல் வெற்றி பெற்றது. எனவே, அடுத்ததாக நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலாவது சிறப்பாக விளையாடி இந்தியா கோப்பையை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடரின் கடைசிப் போட்டியின் கடைசி நாளில் பும்ரா காயத்தை சந்திக்காமல் விளையாடியிருந்தால் இந்தியா வெற்றி பெற்று 2 – 2 (5) என்ற கணக்கில் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்திருக்கும் என சுப்மன் கில் கூறியுள்ளார்.
அதற்கு முன்பாகவே, ஆஸ்திரேலியாவில் 2 முறை டெஸ்ட் தொடரை வென்ற இந்தியா 2023 உலகக்கோப்பை ஃபைனலுக்குச் சென்று, 2024 டி20 உலகக் கோப்பையை வென்றதாகவும் கில் கூறியுள்ளார். எனவே இந்திய அணியை ஒரு மோசமான தொடரை வைத்து மதிப்பிட வேண்டாம் என்று தெரிவிக்கும் அவர், இது பற்றி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தது பின்வருமாறு:
“ஒரு தொடர் எங்களுடைய மொத்த அணியின் ஃபார்மை தீர்மானிக்காது” “கடந்த காலங்களில் எங்களுடைய நிறைய வீரர்கள் தொடர்ச்சியாக அசத்தியுள்ளார்கள். ஆம், ஆஸ்திரேலியாவில் நடைபெற்றத் தொடரில் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நாங்களே செயல்படவில்லை. ஆனாலும் அங்கே நாங்கள் கொஞ்சம் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம். ஜஸ்ப்ரித் பும்ரா துரதிஷ்டவசமாக எங்களுக்கு கடைசி நாளில் விளையாடவில்லை”
“இல்லையெனில் நாங்கள் அப்போட்டியை வென்று தொடரை சமன் செய்திருப்போம். அப்படி நடந்திருந்தால் இந்தப் பேச்சுகளும் விமர்சனங்களும் இருந்திருக்காது. எனவே ஒரு போட்டி எங்களை தீர்மானிக்காது. அதற்கு முன்பாகவே நாங்கள் ஆஸ்திரேலியாவில் 2 முறை தொடரை வென்றுள்ளோம். பின்னர் உலகக் கோப்பை ஃபைனல் வரை சென்ற நாங்கள் டி20 உலகக் கோப்பையை வென்றோம்”
“எனவே இது போன்ற விஷயங்களை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி நாக்பூரில் துவங்க உள்ளது. அந்தத் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.