‘கேம் சேஞ்சர்’ ஜனவரி 10 அன்று வெளியானது. இதை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம், சமுத்திரக்கனி, ஸ்ரீகாந்த், அஞ்சலி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேச முதல்வர் பாப்பி சத்தியமூர்த்தி (ஸ்ரீகாந்த்) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது பாலம் இடிந்து விழுந்து இறந்தார். அவர் இறந்த பிறகு, அவரது மகன் மோப்பி தேவி (எஸ்.ஜே. சூர்யா) அடுத்த முதலமைச்சராக வர முயற்சிக்கிறார். இந்த நிலையில், நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி ராம் நந்தன் (ராம் சரண்) விசாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று அங்குள்ள ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுகிறார்.
அவரது நடவடிக்கைகள் மோப்பி தேவியின் அரசியல் அபிலாஷைகளுக்குத் தடையாக அமைகின்றன. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. அடுத்தடுத்த நகர்வுகள்தான் திரைக்கதை. அரசியல் கதைக்களத்தில் உருவான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் தோல்வியை சந்தித்தது. அமேசான் பிரைம் வீடியோ இந்தப் படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்றுள்ளது. தற்போது ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் பிப்ரவரி 7-ம் தேதி முதல் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.