சென்னை: உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, அப்பல்லோ மருத்துவமனை, இந்திய கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர்கள் சங்கம், தமிழ்நாடு அறுவைசிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் குழந்தைகள் புற்றுநோயியல் சங்கம் ஆகியவை இணைந்து, ‘யூனிஃபை டு நோட்டிஃபை’ என்ற தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து புற்றுநோயியல் நிபுணர்கள் சங்கர் சீனிவாசன், சுரேஷ், பிரசாத் ஈஸ்வரன் மற்றும் சங்க நிர்வாகிகள் பாலசுந்தரம், அய்யப்பன், கலைச்செல்வி ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:- ஹரியானா, கர்நாடகா, திரிபுரா, மேற்கு வங்கம், பஞ்சாப், மிசோரம், ஆந்திரா, கேரளா, குஜராத், தமிழ்நாடு, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், அசாம், மணிப்பூர், ராஜஸ்தான் ஆகிய 15 மாநிலங்களில் ஏற்கனவே புற்றுநோய் பாதிப்பு இல்லை.
ஒவ்வொரு ஆண்டும் 14 லட்சத்துக்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இது, 2025-ல், 15.7 லட்சமாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அரசு சுகாதார துறை, புற்றுநோயை, அறிவிக்கக்கூடிய நோயாக அறிவிக்க வேண்டும். அறிவிக்கப்பட்டால், அது நிகழ்நேர தரவு சேகரிப்பு மற்றும் துல்லியமான அறிக்கையிடலை உறுதி செய்யும்; இதன் மூலம் நோயின் அளவு மற்றும் பரவல் குறித்து தெளிவான புரிதலை பெற முடியும்.
இது புற்றுநோய் சிகிச்சையின் துல்லியம், செயல்திறன் மற்றும் அணுகல் ஆகியவற்றை மேம்படுத்தலாம். இது உலகளாவிய புற்றுநோயியல் ஆராய்ச்சி மற்றும் பராமரிப்பில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்தும். நோய் தடுப்புக்கான சிறந்த உத்திகளை உருவாக்கவும், ஆராய்ச்சிக்கான நிதியை ஒதுக்கவும் இது எங்களுக்கு உதவும்.