சென்னை: டெங்கு, காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுகள் மழை மற்றும் குளிர் காலங்களில் பரவும் அதே வேளையில், வெயில் காலத்தில் சின்னம்மை, பொண்ணுக்கு வீங்கி, அக்கி போன்றவை பரவுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்நிலை மாறி, அனைத்து பருவங்களிலும் அனைத்து வகையான தொற்று நோய்களும் பரவி வருகின்றன. குறிப்பாக குளிர் மற்றும் மழைக்காலங்களில் அம்மை நோய் அதிகரித்துள்ளது. அதேபோல், அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவு மூலம் பரவும் டைபாய்டு காய்ச்சலும் கோடை காலத்தில் மக்களை பாதிக்கிறது.
எனவே, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்கான அசித்ரோமைசின், ஓசெல்டாமிவிர் உள்ளிட்ட 320 மருந்துகளை போதிய அளவில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள, 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களில், காய்ச்சல், சளி மருந்து முதல், உயிர் காக்கும் மருந்துகள் வரை, இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவை தவிர, தேவைக்கு ஏற்ப 13 வகையான தடுப்பூசிகளும் இருப்பில் உள்ளன.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் 1.08 லட்சம் வெறிநாய் தடுப்பூசி குப்பிகள் உள்ளன. பாம்புக்கடிக்கு 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்துகள் உள்ளன. நீரிழிவு நோயாளிகளுக்கு 11 கோடிக்கும் அதிகமான மெட்ஃபோர்மின் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கிடைக்கும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் ஒவ்வொரு நாளும் மருந்து மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டு அந்த விவரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
எந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் எவ்வளவு மருந்து கிடைக்கிறது என்பதை சென்னையில் இருந்தே பார்க்கலாம். இதன் மூலம், மருந்துகள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், உடனடியாக கிடைப்பதை உறுதி செய்து வருகிறோம். எந்தப் பருவத்தில் எந்த நோய் பரவினாலும், அதைச் சமாளிக்க மருந்துக் கையிருப்பு, சிகிச்சை அமைப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.