ஆந்திராவில் சிறப்பாகப் பணியாற்றி கோப்புகளைச் சரிபார்த்து உடனடியாகப் பணிகளை முடிக்கும் சிறந்த அமைச்சர்கள் பட்டியலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று வெளியிட்டார். இதில் அவர் 6-வது இடத்தில் உள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நேற்று அமராவதியில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், மின் கட்டண உயர்வு கூடாது, தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக விரைவில் நிறைவேற்ற வேண்டும்.
அரசு ஆசிரியர் பணியிடங்கள் உட்பட 7.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் என அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துறை சார்ந்த அனைத்து அமைச்சர்களும் தங்களின் பணிகளை விரைவாகவும், திறமையாகவும் முடிக்க வேண்டும் என்றும், மக்களிடம் சென்று அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்க்க உடனடி முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மதிய உணவுத் திட்டம் அவர்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவைப் போல இருக்க வேண்டும் என்றும், இலவச மதிய உணவுத் திட்டத்திற்கு உயர்தர அரிசியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார். இதனிடையே கடந்த 9 மாதங்களில் சிறப்பாக பணியாற்றிய அமைச்சர்கள் பட்டியலையும் அவரே வெளியிட்டார்.
அதன்படி எஸ்எம்டி பரூக் முதலிடம் பிடித்தார். முதல்வர் சந்திரபாபு நாயுடு 6-வது இடத்திலும், அவரது மகன் லோகேஷ் 8-வது இடத்திலும், துணை முதல்வர் பவன் கல்யாண் 10-வது இடத்திலும், சுபாஷ் கடைசி இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.