சென்னை: நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்த தண்டேல் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், நடிகர் நாகர்ஜுனா தனது குடும்பத்தினருடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அக்கினேனி நாகேஸ்வர ராவ் வாழ்க்கை புத்தகத்தை பரிசளித்தார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
நாகார்ஜுனா தனது குடும்பத்துடன் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து சால்வை அணிவித்து மலர்கொத்து வழங்கி நாகேஸ்வரராவ் குறித்த புத்தகத்தை பரிசாக வழங்கினார். அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் நாக சைதன்யாவுக்கும் அவரது மனைவி சோபிதா துலிபாலாவுக்கும் தஞ்சாவூர் பொம்மையை பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி. இந்த சந்திப்பில் தந்தை நாகார்ஜுனா, அம்மா அமலா அக்கினேனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நடிகை சோபிதா துலிபாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற கட்டிடத்தில் சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அக்கினேனி நாகேஸ்வர ராவின் சினிமா மரபுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பத்ம பூஷன் விருது பெற்ற டாக்டர் யர்லகடா லக்ஷ்மி பிரசாத்தின் ‘அக்கினேனி கா விராட் வ்யக்தித்வா’வை வழங்குவது பெருமையாக உள்ளது. அவரது வாழ்நாள் பணிக்கான உங்கள் அங்கீகாரம் எங்கள் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், இந்திய திரைப்பட ஆர்வலர்களுக்கும் கிடைத்த பொக்கிஷம் என்று பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இதையடுத்து, நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி இரண்டாவது திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு அவர் நடித்த முதல் படமான தண்டேல் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் ரூ.10 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 10 கோடி வசூல் செய்துள்ளது.