சென்னை: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பள்ளி மாணவி கழுத்தில் மாணவன் மஞ்சள் கயிறு கட்டியது தொடர்பான வழக்கு மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் நடந்த இளவயது திருமணம் தொடர்பான வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வு விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பாலியல் குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ஆண்களின் விருப்பமில்லாமல் அவர்களுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிடக்கூடாது என்றும் மாவட்ட செசன்சு கோர்ட்டுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பள்ளி மாணவி கழுத்தில் மாணவன் மஞ்சள் கயிறு கட்டிய சம்பவம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற இளவயது திருமணம் தொடர்பான வழக்குகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வக்கீல்கள், “கடந்த ஆண்டு ஜூன் 15-ந் தேதியில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, பாலியல் வழக்குகளில் இரு விரல் பரிசோதனை முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், பாலியல் குற்ற வழக்குகளில் விசாரணைக்காக பாதுகாத்து வைக்கப்படும் முழு வளர்ச்சி மற்றும் வளர்ச்சி பெறாத கருவை பராமரிப்பது தொடர்பாக, உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அந்த உத்தரவை பின்பற்றுவதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன” என்றார்.
அதனை தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “பாலியல் வழக்கில் கைதான ஆண்களை ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உத்தரவு எதுவும் மாவட்ட அளவிலான செசன்சு கோர்ட்டுகள் பிறப்பிக்க கூடாது. ஒருவேளை தான் நிரபராதி என்பதை நிரூபிக்கும் விதமாக குற்றம் சாட்டப்பட்டவர் விரும்பினால் அந்த சோதனையை மேற்கொள்ள நீதிமன்றத்தை நாடலாம்” எனத் தெரிவித்தனர்.
மேலும், “ஆண்மை பரிசோதனைக்கு யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என்ற உத்தரவை தீவிரமாக பின்பற்றும்படி அனைத்து காவல் நிலையம் இன்ஸ்பெக்டர்களுக்கு தமிழ்நாடு டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்பி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்றும் நீதிபதிகள் கூறினர்.
தொடர்ந்து, “சிறுவர்கள், சிறுமிகள் திருமணம் செய்து கொண்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், சிறுவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இந்து சிறுவர்களை கண்காணிப்பு இல்லங்களில் அடைக்க சிறார் நீதிமன்றங்கள் எந்திரத்தனமாக உத்தரவு பிறப்பித்ததாகவும் எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. மைனர் சிறுவர்களை கைது செய்யக்கூடாது என போலீசாருக்கு டி.ஜி.பி., அறிவுறுத்த வேண்டும்” என்றும் நீதிபதிகள் கூறினர்.
இவ்வாறு பாலியல் குற்ற வழக்குகளில் தொடர்புடைய கருவை பராமரிப்பது தொடர்பாக, தற்போது உள்ள வசதிகள் பற்றி தடய அறிவியல் துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். “கருவை பாதுகாக்க வசதி இல்லாத மருத்துவமனையில் இருந்து, அந்த கருவை பாதுகாக்க வசதி உள்ள மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும்” என குறிப்பிட்டனர்.
அதற்குப் பிறகு, “பாலியல் தொடர்பான வழக்குகளில் விவரங்கள், குறிப்பாக முதல் தகவல் அறிக்கைகள் பொதுவெளியில் கசிகிறது. இதனால் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்கள் வெளியில் தெரிந்து விடுகிறது. இதை தடுக்கும் விதமாக தகுந்த உத்தரவு அடுத்த விசாரணையில் பிறப்பிக்கப்படும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணையை வருகிற மார்ச் 14-ந் தேதிக்கு தள்ளி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.