கட்டாக் நகரில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 305 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்கள் எடுத்தார், இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின் இந்தியா விளையாடிய போது, கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியான சதத்தை அடித்து 119 ரன்கள் குவித்தார். சுப்மன் கில் 60, ஸ்ரேயாஸ் ஐயர் 44, அக்சர் படேல் 41 ரன்கள் எடுத்தனர். இதனால், 44.3 ஓவரில் 308/6 ரன்கள் எடுத்து வெற்றி பெற்ற இந்தியா, 2 – 0 என்ற கணக்கில் இந்தத் தொடரையும் வென்றது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
சமீபத்திய போட்டிகளில் சுமாராக விளையாடி இந்தியாவின் தோல்விக்கு காரணமான ரோஹித் சர்மாவை ஓய்வு பெறுமாறு நிறைய ரசிகர்கள் விமர்சித்தனர். இருப்பினும், மனம் தளராத ரோஹித் தமக்கு பிடித்த ஒருநாள் கிரிக்கெட்டில் சதத்தை அடித்து 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் ஃபார்முக்கு திரும்பி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.
இப்போது சர்வதேச கிரிக்கெட்டில் துவக்க வீரராக ரோஹித் சர்மா 15350 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 2வது அதிக ரன்கள் அடித்த இந்திய துவக்க வீரராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை உடைத்துள்ளார். அந்த பட்டியலில் விரேந்தர் சேவாக் 16119 ரன்களுடன் முதல் இடத்தில், ரோஹித் சர்மா 15350 ரன்களுடன் இரண்டாவது இடத்தில், சச்சின் டெண்டுல்கர் 15335 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
மேலும், ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 3வது அதிக சதத்தை அடித்த இந்திய வீரராகவும் நிலைத்துள்ளார். முன்னதாக, ராகுல் டிராவிட் 48 சதங்கள் அடித்த நிலையில் ரோஹித் 49 சதங்களை அடித்து 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் 2 இடங்களில் சச்சின் டெண்டுல்கர் 100 சதங்கள் மற்றும் விராட் கோலி 81 சதங்களுடன் உள்ளனர்.
இதை அடுத்து, சர்வதேச கிரிக்கெட்டில் 30 வயதிற்கு பின் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரராகவும் ரோஹித் சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் ரோஹித் சர்மா 36 சதங்களுடன் முதல் இடத்தில், சச்சின் டெண்டுல்கர் 35 சதங்களுடன் இரண்டாவது இடத்தில், ராகுல் டிராவிட் 33 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இன்னொரு முக்கிய சாதனையாக, ஒருநாள் கிரிக்கெட்டில் 30 வயதிற்கு பின் அதிக சதங்கள் அடித்த வீரராகவும் ரோஹித் சர்மா உலக சாதனையை உருவாக்கியுள்ளார். இந்த பட்டியலில் ரோஹித் சர்மா 22 சதங்களுடன் முதல் இடத்தில், சனாத் ஜெயசூர்யா மற்றும் டி தில்சன் தலா 21 சதங்களுடன் இரண்டாவது இடத்தில், குமார் சங்கக்காரா 19 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.