2027-ம் ஆண்டு பொங்கலுக்கு ‘சங்கராந்திகி வஸ்துணம்’ 2 வெளியாகும் என நடிகர் வெங்கடேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தெலுங்கில் பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘சங்கராந்திகி வஸ்துணம்’ படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூலித்துள்ளது. ‘கேம் சேஞ்சர்’ படத்தால் தில் ராஜுவுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை இந்தப் படம் ஈடு செய்திருக்கிறது. படத்தின் வெற்றியை படக்குழுவினர் பல்வேறு விதமாக கொண்டாடி வருகின்றனர்.
படக்குழுவினருக்கு இறுதி நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். விழாவில் பேசிய வெங்கடேஷ், அனில் ரவிபுடியுடன் மீண்டும் இணைவதாகவும், இது ‘சங்கராந்திகி வஸ்துணம்’ படத்தின் இரண்டாம் பாகம் என்றும் குறிப்பிட்டார். மேலும் இப்படம் 2027-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் உறுதி அளித்துள்ளார். தற்போது ‘சங்கராந்திகி வஸ்துணம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அனில் ரவிபுடி சிரஞ்சீவி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இப்படமும் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படவுள்ளது. அதை முடித்த பிறகுதான் ‘சங்கராந்திகி வஸ்துணம் 2’ படத்தை இயக்குவார் அனில் ரவிபுடி.