தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,642 மருத்துவர் பணியிடங்களுக்கு மருத்துவர்களை நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கியுள்ளது. வரும் 15-ம் தேதி வரை நடைபெறும் இந்த சான்றிதழ் சரிபார்ப்புக்கு 4,585 டாக்டர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (எம்எஸ்எஸ்) மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2,553 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜனவரி 5-ம் தேதி நடைபெற்ற தேர்வில் எம்பிபிஎஸ் முடித்த 24,000 மருத்துவர்கள் கலந்து கொண்டனர். 89 கூடுதல் காலியிடங்கள் கண்டறியப்பட்டதால், மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 2,642 ஆக உயர்த்தப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்று காலை 9 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மற்றும் தேசிய சுகாதார ஆணைய அலுவலகத்தில் தொடங்கியது.
வரும் 15-ம் தேதி வரை நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 4,585 டாக்டர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். நியமிக்கப்படும் மருத்துவர்களுக்கான கவுன்சிலிங் வரும் 20-ம் தேதிக்கு பிறகு நடைபெறும். அதன்பின், மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்குவார்.