இந்தியாவில் அதானி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காத்து வருவதாகவும், அதை தனிப்பட்ட பிரச்சினையாகக் கருதி வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் போஸ்டில் கூறியிருப்பதாவது:- அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியிடம், அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அதிபர் டிரம்ப் விவாதிப்பாரா என செய்தியாளர்கள் கேட்டனர்.
அப்போது, இரு நாட்டு தலைவர்களும் தனிப்பட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். இது அவரது வழக்கமான பதில். அதானி விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் போது அமைதியாக இருப்பதும், வெளிநாட்டில் கேள்வி எழுப்பப்படும் போது தனிப்பட்ட பிரச்சினை என்று கூறி ஏய்ப்பதும் பிரதமர் மோடியின் தந்திரம். அமெரிக்காவில் அதானியை காப்பாற்ற பிரதமர் மோடியும் செயல்பட்டு வருகிறார்.
தேசத்தைக் கட்டமைக்கிறோம் என்ற பெயரில் மோடிஜி தனது நண்பர் அதானியின் பாக்கெட்டை நிரப்புகிறார். லஞ்சம் கொடுப்பதையும் தேசத்தின் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதையும் பிரதமர் வசதியாக தனிப்பட்ட விஷயமாக மாற்றிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். இந்தியாவில் சூரிய மின்சக்தி திட்ட ஒப்பந்தங்களை பெற 250 மில்லியன் டாலர் லஞ்சம் பெற்ற வழக்கில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி மீது அமெரிக்க நீதித்துறை கடந்த நவம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.