பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டும் பலர், குறைந்த விலையுடன் கிடைக்கும் ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகளை வாங்கி லாபம் அடைய விரும்புகின்றனர். குறிப்பாக நீண்ட கால முதலீடு நல்ல மொத்த வருவாயை தரும் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் இதில் ஈடுபடுகிறார்கள். ஆனால், அவர்களின் முதலீடு பாதுகாப்பாக இருக்கும் என்ற உத்தரவாதம் இல்லை என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஐசிஐசிஐ புருடென்ஷியல் ஏஎம்சியின் முதலீட்டு அதிகாரி (CIO) எஸ்.நரேன், தற்போதைய சந்தை நிலைமையை 2008-09 காலகட்டத்துடன் ஒப்பிட்டு கூறுகையில், அப்போது நிறுவனங்கள் பெரும்பாலும் வங்கி கடன்களை நம்பியிருந்ததாகவும், ஆனால் தற்போது பங்குச் சந்தையின் புதிய பங்கு வெளியீடுகள் (IPO) மூலம் முதலீட்டை ஈர்க்க முற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் இந்த பங்குகளின் மதிப்பு அதிகரித்து, முதலீட்டாளர்கள் ஆபத்து நிறைந்த சூழலில் உள்ளனர்.
அத்துடன், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களும் ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகளில் அதிகமாக முதலீடு செய்து வருகின்றன. எதிர்காலத்தில் சந்தை சரிந்தால், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை திரும்ப பெற முடியாது போகும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்படுகிறது.
நிப்டி ஸ்மால்கேப் 250 இன்டெக்ஸ் கடந்த ஆண்டு செப்டம்பரில் 18,688.30 புள்ளிகளை எட்டியது. ஆனால் அதன் பிறகு 21% வீழ்ச்சியைக் கண்டுள்ளது. பொதுவாக 52 வார உச்ச நிலையிலிருந்து 20% குறைவாக மாறினால், அது வீழ்ச்சி மண்டலத்தில் இருப்பதாக கருதப்படும். இதன் மூலம், ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்வது மிகவும் ஆபத்தான நிலையை கொண்டிருக்கிறது.
முதலீட்டாளர்கள் சந்தை நிலவரத்தை கவனமாக கண்காணித்து, எந்த முடிவையும் எடுத்துக்கொள்ள வேண்டும். சந்தையின் நடப்பு நிலையை பொருத்து முதலீட்டை தொடர்வதா அல்லது காத்திருப்பதா என்ற முடிவை எடுக்க வேண்டும்.