சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் தான் நமக்கு முக்கியம்… ‘2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலே நமக்கு முக்கியமான டோர்னமென்ட்’ என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திமுக சார்பு அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிக்கு பிரத்யேக உடை மற்றும் பரிசுக் கோப்பையை சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: “திமுகவினர் அரசியல் களத்தில் மட்டுமல்ல, ஆடுகளத்திலும் திறமைசாலிகள் என்பதை நிரூபிக்க வேண்டும். இதைவிட முக்கியமான ஒரு டோர்னமென்ட் என்றால் அது 2026 சட்டப்பேரவைத் தேர்தல். அரசியல் களத்தில் நமக்கு எதிரே நிறைய அணிகள் இருக்கலாம். புதிது, புதிதாக அணிகள் உருவாகலாம். ஆனால் ஜெயிக்க போவது, முதல்வர் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அணி என்பதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழக மக்களுக்கு பிடித்தது மற்றும் என்றென்றைக்கும் மனதுக்கு நெருக்கமான அணி என்றால் முதல்வர் தலைமையிலான திமுக அணிதான். இந்த போட்டிக்கு மட்டுமல்ல; வரும் சட்டப்பேரவைத் தேர்தல் என்னும் மிகப்பெரிய போட்டிக்கும் இப்போதில் இருந்தே பயிற்சிகளை தொடங்க வேண்டும். 200-க்கும் அதிகமான தொகுதிகளில் நாம் ஜெயித்துக் காட்ட வேண்டும் என்று திமுக தலைவர் கூறியுள்ளார். அவ்வாறு வெற்றி பெறுவதே திமுக தலைவருக்கு அளிக்க கூடிய சிறந்த பிறந்தநாள் பரிசு. இவ்வாறு அவர் பேசினார்.