மாஸ்கோ: விடுவிக்க ஏற்பாடு… ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்தியர்களை விடுவிக்க ஏற்பாடு செய்வதாக, பிரதமர் நரேந்திர மோடியிடம், அதிபர் விளாடிமிர் புடின் உறுதி அளித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது 2022ல் ரஷ்யா போர் தொடுத்தது. மூன்றாவது ஆண்டாக நீடிக்கிறது. இதுவரை இரு தரப்பிலுமாக ஒரு லட்சம் பேருக்கு மேல் இறந்துள்ளனர்.
அதில் 11,000 பேருக்கு மேல் அப்பாவி சிவிலியன்கள். ரஷ்ய தரப்பில் மரண எண்ணிக்கை 50,000 தாண்டி விட்டதாக பி.பி.சி., சொல்கிறது. உக்ரைன் ராணுவ பலி 32,000 என அது கணக்கிட்டுள்ளது.
அமெரிக்கா தலைமையில் மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குகின்றன. எனவே, ரஷ்யா எதிர்பார்த்த மாதிரி சீக்கிரமாக போர் முடிவுக்கு வரவில்லை. உக்ரைனின் எதிர் தாக்குதல் பலமாக இருப்பதால், ராணுவ பயிற்சியே பெறாத ஆர்வலர்கள், கைதிகள், கூலிப்படையினர், வெளிநாட்டினர் ஆகியோரை போர்க்களத்தில் முன்னிறுத்தியது ரஷ்யா. அவர்கள் கதி என்ன என்பதை சொல்ல தேவையில்லை.
அவ்வாறு ரஷ்யாவின் சார்பாக களம் இறக்கப்பட்டவர்களில் இந்தியர்களும் உண்டு. குஜராத், தெலுங்கானா, கேரளா மாநிலங்களை சேர்ந்த 20 முதல் 30 வயது வரையிலான வாலிபர்கள் உக்ரைனின் தாக்குதலில் இறந்த செய்திகள் இந்தியாவில் அதிர்ச்சி ஏற்படுத்தின. போர் புரிவதற்கு என்பதை சொல்லாமல், ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர் வேலை, கவர்ச்சியான சம்பளம் என ஆசைகாட்டி பல இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.
இன்னொரு நாட்டில் நடக்கும் போரில் இந்தியர்கள் கொல்லப்படுவதை கண்டித்து குரல்கள் எழுந்தன. இந்தியர்களை உடனடியாக ராணுவ பணிகளில் இருந்து விடுவிக்கும்படி ரஷ்யாவை மத்திய அரசு வலியுறுத்தியது. ஆவன செய்வதாக ரஷ்யா சொன்னதே தவிர, இந்தியர்கள் எவரும் அங்கிருந்து திரும்பி வரவில்லை.
இந்த பின்னணியில், இந்தியா – ரஷ்யா இடையிலான 22வது ஆண்டு மாநாட்டில் பங்கேற்க, இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ளார். இந்த சந்திப்புகளின்போது, ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்தியர்கள் குறித்து மோடி கவலை தெரிவித்தார். இந்தியர்களை விடுவித்து, இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு வலியுறுத்தினார்.
நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக புடின் உறுதி அளித்தார். இது மோடியின் பயணத்துக்கு கிடைத்த முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.