புதுடெல்லி: சட்டவிரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக பெண் மருத்துவர் உள்பட 7 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
வங்கதேசம் மற்றும் டெல்லியில் சட்டவிரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுவதாக டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பான தகவல்களை போலீசார் கடந்த 2 மாதங்களாக சேகரித்து வந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக பெண் மருத்துவர் உட்பட 7 பேரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் அமித் கோயல் கூறுகையில், ‘‘சட்டவிரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர் மூளையாக செயல்பட்டார்.
உடல் உறுப்பு தானம் செய்தவர்களும், பெற்றவர்களும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. போலி ஆவணங்கள் மூலம் அவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை வசூலித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மருத்துவர் 2 அல்லது 3 மருத்துவமனைகளுடன் தொடர்புடையவர்.
தானம் செய்பவரும், பெறுபவரும் இரத்த உறவினர்கள் இல்லை என்று தெரிந்திருந்தும் மருத்துவர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தார். இதனால், அவரும் இந்த மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்துள்ளோம்,” என்றார். இந்தியாவின் மனித உறுப்பு மாற்றுச் சட்டத்தின்படி, பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் உட்பட நெருங்கிய உறவினர்கள் மட்டுமே உறுப்புகளை தானம் செய்யவோ அல்லது பெறவோ முடியும்.
இந்தியாவில் வசிப்பவர்கள் தங்களுக்கு சொந்தமில்லாத வெளிநாட்டினருக்கு உறுப்புகளை தானம் செய்ய முடியாது. இந்நிலையில், டெல்லியில் சட்டவிரோதமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.