2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி ரோகித் சர்மாவின் தலைமையில் பங்கேற்று விளையாடி வருகிறது. பாகிஸ்தான் நாட்டிற்கு செல்லும் பாதுகாப்பு காரணமாக இந்திய அணி தங்களது அனைத்து போட்டிகளையும் துபாய் மைதானத்தில் விளையாட முடிவு செய்துள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி களம் இறங்கியுள்ளது.
இந்த தொடரின் போது, இந்திய அணி துணை கேப்டனான சுப்மன் கில் துபாய் மைதானம் பற்றிய சில சுவாரஸ்யமான கருத்துகளை பகிர்ந்துள்ளார். “இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி எப்போதும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற உழைப்போம்” என அவர் கூறினார்.
பாகிஸ்தான் அணி தங்களது முதல் போட்டியில் தோல்வியடைந்தாலும், அவற்றை எளிதாக மதிப்பிட மாட்டோம் என்று சுப்மன் கில் தெரிவித்தார். “பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி எப்போதும் சவாலாக இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
துபாய் மைதானம் குறித்தும் சுப்மன் கில் கூறியதாவது, “இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது எளிதாக இல்லை. கடந்த போட்டியில் பனிப்பொழிவு சுத்தமாக இல்லை. அதனால் இரண்டாவது பேட்டிங் செய்யும்போது மிகுந்த சிரமம் ஏற்பட்டது. ஒரு சிங்கிள் எடுப்பது கூட சவாலாக இருக்கிறது.”
“எனவே, டாசில் வெற்றி பெற்றால் அது மிகவும் முக்கியம். பனிப்பொழிவு இல்லாத நேரத்தில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படும்” என்றார் சுப்மன் கில்.