சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை விசாரிக்க 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. இக்குழுவினர் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் அது தொடர்பாக வெளியிடப்பட்ட முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) விவகாரம் குறித்து தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஞானசேகரன் மீதான முதல்கட்ட குற்றப்பத்திரிக்கையை சிறப்பு புலனாய்வுக் குழு இன்று ஆன்லைனில் தாக்கல் செய்துள்ளது. மாணவி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் மட்டுமே தொடர்புபட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஞானசேகரனின் செல்போன் உரையாடல்கள் அனைத்தும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, ஞானசேகரனின் செல்போன் உரையாடல்களின் ஆடியோ ஆதாரத்தை உறுதி செய்வதற்காக, சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் எதிரே உள்ள அரசு தடய அறிவியல் துறை கட்டடத்தில் 3 மணி நேரம் அவருக்கு குரல் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.
குரல் பரிசோதனையைப் போலவே, இரத்தப் பரிசோதனையும் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒரு முக்கிய குறியீடாகக் கருதப்படுகிறது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வுக் குழு, தற்போது பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.