புதுடெல்லி: ‘மகளிர் தினத்தையொட்டி, சாதனை படைத்த பெண்களிடம் எனது சமூக வலைதள கணக்குகளை ஒப்படைப்பேன்’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:- பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். பெண்களின் சக்தி நம் நாட்டை பலப்படுத்தும். பெண்களின் உறுதியைக் கொண்டாடுவோம், போற்றுவோம்.
மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது.அன்றைய தினம் எனது சமூக வலைதள கணக்குகளை பெண்களிடம் ஒப்படைக்க விரும்புகிறேன். பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 7 பெண்கள் தங்கள் பணி மற்றும் அனுபவத்தை எனது சமூக ஊடக கணக்குகள் மூலம் பகிர்ந்து கொள்வார்கள். இது அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும். உலகில் 8 பேரில் ஒருவர் உடல் பருமனால் அவதிப்படுவதாகவும், கடந்த சில ஆண்டுகளில் அவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன.
குழந்தைகளிடையே உடல் பருமன் பிரச்சனை 4 மடங்கு அதிகரித்துள்ளது, இது மிகவும் கவலை அளிக்கிறது. எனவே, சமையலில் எண்ணெய் பயன்பாட்டை 10 சதவீதம் குறைக்க வேண்டும். முதலில், 10 பேர் இதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்கிறார்கள். மேலும் அந்த 10 பேரும் இந்த சவாலை மேலும் 10 பேருக்கு பரப்ப வேண்டும். இதன் மூலம் ஆரோக்கியமான, வலிமையான இந்தியாவை உருவாக்க முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.