மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் மார்ச் 3-ம் தேதி நெட்ஃபிக்ஸ் ஓடிடி-ல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ள தகவலில், மார்ச் 3-ம் தேதி முதல் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ‘விடாமுயற்சி’யை நெட்பிளிக்ஸில் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் சுமார் ரூ. 137 கோடி வசூலை எட்டியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
‘சராசரி’ என்று விமர்சன ரீதியாக வர்ணிக்கப்படும் இப்படம் அஜித் ரசிகர்களுக்கு ‘மாஸ்’ அம்சங்களைத் தாண்டி ஒரு புதிய திரை அனுபவத்தை அளித்துள்ளது. ஹாலிவுட்டின் ‘பிரேக்டவுன்’ கதையைத் தழுவி எடுக்கப்பட்ட ‘விடாமுயற்சி’ படத்துக்கு அஜித்தின் சம்பளம் ரூ. 110 கோடி மற்றும் ரூ. 120 கோடி, இதன் மொத்த பட்ஜெட் ரூ. 200 கோடி என தெரிகிறது. இந்நிலையில் இப்படம் வரும் 3-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.