சென்னை: “விஜய்யால் திமுகவை வீழ்த்த முடியாது, ஒருபக்கம் பிரசாந்த் கிஷோர், மறுபக்கம் மார்ட்டின் மருமகன் என்றால், விஜய் நடத்தும் அரசியல் கட்சி எந்த திசை நோக்கிச் செல்லப் போகிறது என்பதை இப்போதே புரிந்துகொள்ள முடிகிறதே” என தமிழருவி மணியன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் தவெக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த், ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பிரசாந்த் கிஷோர், “வாரிசு அரசியல், ஊழல், ஜாதி வேறுபாடு ஆகியவை தமிழ்நாட்டின் தற்போதைய மாடல்” எனக் கூறினார்.
இந்நிலையில், காமராஜர் மக்கள் கட்சியின் நிறுவனர் தமிழருவி மணியன் அளித்த பேட்டியில், “தமிழக வெற்றிக் கழகம் உருவானது திமுகவை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றவே. ஆனால், தமிழ்நாட்டில் சிறுபான்மை வாக்காளர்களை கவர, பாஜகவையும் விமர்சிக்க வேண்டும் என்பதால், விஜய் இரு கட்சிகளையும் தாக்கிப் பேசுகிறார். திமுகவும், பாஜகவும் சேர்ந்து நாடகம் ஆடுவது புதிதல்ல, அதையே விஜய் இப்போது கூறுகிறார். அரசியலில் நடிகர்கள் மாறுவார்கள், ஆனால் மேடை மாறுவதில்லை” என்று தெரிவித்தார்.
“விஜய்யின் அரசியல் பிரவேசத்தை கொள்கை ரீதியாக விமர்சிக்கவேண்டும், அவர் நடிகர் என்பதற்காக தனிப்பட்ட முறையில் தாக்குவது மேன்மையான அரசியல் அல்ல. இதை கருணாநிதியே செய்திருக்கிறார். எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கியபோது, மலையாளிக்கு வாக்களிக்கலாமா என விமர்சித்தார். விஜய்யின் பொருளாதாரக் கொள்கை என்ன? ஏழை மக்களின் நிலை குறித்து அவர் சிந்தித்திருக்கிறாரா? என்பது முக்கியமான கேள்வி. பிரசாந்த் கிஷோர் ஒரு மாநிலத்தில் வெறுப்பலை கிளப்புவதால் மட்டும் வெற்றி பெற முடியாது.
பிரசாந்த் கிஷோரால் திமுக வெற்றி பெற்றதாகக் கூறுவது உண்மையல்ல. தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே மக்கள் எண்ணமாக இருந்தது. ஸ்டாலின் பக்கம் வந்து நின்று பிரசாந்த் கிஷோர் வியூகங்களை அமைத்தார். ஆனால், அவரால் ஒரு மாநிலத்தில் கட்சியை வெற்றி பெறச் செய்ய முடியாது. பீகாரில் கூட, அவரின் கட்சி டெபாசிட்டை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.
திமுகவை ஊழல் கட்சி எனக் கூறும் பிரசாந்த் கிஷோர், 2021 தேர்தலில் திமுகவுக்கு வியூகம் அமைத்துத் தந்தவர். யாரேனும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தால், அவர் யார் என்பதையே பாராமல் வியூகம் அமைப்பவர். விஜய், ஊழல் மனிதர்களை அகற்றப் புறப்படுவதாகக் கூறுகின்றார். ஆனால், ஊழல் ஆட்சிக்கு உதவியதாகக் கூறப்படும் பிரசாந்த் கிஷோரையே தனது வியூக வகுப்பாளராக வைத்திருக்கிறார்.
மற்றொரு பக்கம், ஆதவ் அர்ஜுனா, லாட்டரி மார்ட்டினின் மருமகன் என்பதுதான் அவரது அடையாளம். சிக்கிம் லாட்டரி மோசடியில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆதவ் அர்ஜுனா, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்த நியாயத்திற்காக போராடப் போகிறார்? ஒரு பக்கம் பிரசாந்த் கிஷோர், மறுபக்கம் மார்ட்டின் மருமகன் என்றால், விஜய் நடத்தும் அரசியல் கட்சி எந்த திசை நோக்கிச் செல்லப் போகிறது? இது ஊழல் அற்ற ஆட்சியாக மாறுமா? இதையெல்லாம் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது” எனத் தெரிவித்தார்.