மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ரூ.200 கோடி பங்களாவை விட்டு வெளியேறி வாடகை வீட்டில் குடியேறுகிறார். மும்பையில் ஷாருக்கானுக்கு சொந்தமாக மன்னத் என்ற பங்களா உள்ளது. ஷாருக்கான் பங்களாவை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு குடும்பத்துடன் குடியேற முடிவு செய்துள்ளார். இதற்காக தான் வசிக்கும் பாந்த்ரா பகுதியில் கட்டப்பட்டுள்ள சொகுசு அடுக்குமாடி கட்டிடத்தில் 4 மாடிகளை வாடகைக்கு எடுத்துள்ளார் ஷாருக்கான்.
ஒவ்வொரு தளமும் ஒரு வீடாக கட்டப்பட்டுள்ளது. இதை தயாரிப்பாளர் வாசு பாக்னானி கட்டினார். இதற்காக வாசுவின் மகன் ஜாக்கி மற்றும் மகள் தீப்ஷிகா தேஷ்முக் ஆகியோருடன் ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஷாருக்கான் தனது பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் சமையல்காரர்களும் தங்க வேண்டும் என்று கருதி 4 மாடிகளை எடுத்துள்ளார்.
இதற்காக மாதந்தோறும் ரூ.24 லட்சம் வாடகை செலுத்துவார். ஷாருக்கான் மன்னத்தில் உள்ள தனது பங்களாவில் மேலும் இரண்டு மாடிகளை கட்ட திட்டமிட்டுள்ளார். பங்களாவின் பழைய பகுதிகளை புதுப்பிக்கவும் திட்டமிட்டுள்ளார். இந்த சீரமைப்பு பணிக்காக, சொந்த பங்களாவை விட்டு, வரும் மே மாதம் முதல், 2 ஆண்டுகள் வாடகை வீட்டில் தங்குவார் என, அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.