மதுரை மாநகரில் தமுக்கம் சந்திப்பு முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரை மேம்பால கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. இதன் பொருட்டு, கோரிப்பாளையம் ஏ.வி. பாலம் நுழைவுவாயிலில் கட்டுமான பணி நடைபெற இருப்பதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமமின்றி செல்வதற்காக நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து மதுரை மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோரிப்பாளையத்தில் இருந்து சிம்மக்கல் மற்றும் நெல்பேட்டை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும், தேவர் சிலையில் இருந்து மீனாட்சி அரசு மகளிர் கலைக்கல்லூரி சாலையில் சென்று, புதிதாக கட்டப்பட்ட இணைப்பு பாலம் வழியாக மீண்டும் ஏ.வி. பாலத்தை அடைந்து அண்ணா சிலை வழியாக செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கல்பாலம் சந்திப்பில் இருந்து மீனாட்சி அரசு மகளிர் கலைக்கல்லூரி வழியாக கோரிப்பாளையம் செல்ல எந்தவொரு வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்படாது. அண்ணாநகர், தெப்பக்குளம், காமராஜர் சாலை வழியாக செல்லும் கனரக மற்றும் இதர வாகனங்கள் அனைத்தும், கோரிப்பாளையம் ஏ.வி. பாலத்தின் இடதுபுறம் உள்ள மூங்கில் கடை சாலை வழியாக சென்று, வைகை வடகரை சாலையை அடைந்து இடது புறமாக திரும்பி செல்ல வேண்டும்.
திண்டுக்கல் மற்றும் ஆரப்பாளையம் பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள், மூங்கில் கடை சாலை வழியாக சென்று, வலது புறமாக திரும்பி, தேனி ஆனந்தம் சந்திப்பு, வைகை வடகரை சாலையை அடைந்து கல்பாலம், குமரன் சாலை, எம்.ஜி.ஆர். பாலம் சந்திப்பு, செல்லூர் கபடி ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனுடன், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இந்த போக்குவரத்து மாற்று ஏற்பாடுகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.