சென்னை; கர்ப்பக்காலம் என்பது பெண்களுக்கு மனதளவில் கொண்டாட்டமாக இருந்தாலும், உடை அளவில் கொஞ்சம் திண்டாட்டமாகத்தான் இருக்கும். கர்ப்பகாலத்தில் வயிறு பெரிதாகிவிடுவதால் அதற்கு ஏற்ற சவுகரியமான உடைகள் அணியும்போது அவை கூடுதல் அழகு தராதவைகளாக இருந்தன. தற்போது கர்ப்பிணிப் பெண்களும் மாடர்ன் உடைகளை அணிந்துகொண்டு மகிழ்ச்சியாக வலம் வருகிறார்கள். அவர்களுக்கான உடைகளை பற்றி பார்க்கலாம்.
மேக்சி டிரஸ்: கர்ப்பிணிகள் பயணம் செய்யும்போது மேக்சி டிரஸ் பயன்படுத்திக்கொள்ளலாம். சுகமான பயணத்திற்கு ஏற்ற சூப்பரான உடை இது. அவுட்டிங் செல்லும்போதும், கடற்கரைகளில் நடக்கும் போதும் மேக்சி நன்றாகவே கைகொடுக்கும். இந்த உடையில் வித்தியாசமாக காட்சியளிக்க விரும்புகிறவர்கள் மேக்சிக்கு மேல் பகுதியில், அதிக அழுத்தம்கொடுக்காத சிறிய பெல்ட் அணிந்துகொள்ளலாம்.
ஜம்ப் சூட்: கூடுதலான பேஷனை விரும்பும் கர்ப்பிணிகள் ஜம்ப் சூட் அணிந்துகொள்ளலாம். அதற்கு பொருத்தமான டிசர்ட் அல்லது சாதாரண சட்டை அணிந்துகொண்டால், வித்தியாசமான அழகுடன் திகழமுடியும். குண்டாகத் தெரியும் கர்ப்பிணிகள் கறுப்பு நிறத்திலான ஜம்ப் சூட்டினை அணிந்தால், தோற்றம் சற்று ஒல்லியாகத் தெரியும்.
கவுன் மாடல்: பெரும்பாலும் கர்ப்பிணிகளுக்கு கவுன் மாடல் உடைகளே பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் மூட்டுக்கு கீழ்வரை நீளம் கொண்ட ஷிப்ட் டிரஸ்கள் அவர்களுக்கு அதிக சவுகரியத்தை தரும். இந்த உடைகளில் வித்தியாசமான நிறங்களும், டிசைன்களும் கொண்டவைகளை பெண்கள் தேர்ந்தெடுக்கவேண்டும். அகலம் அதிகமுள்ள நெக் உடைகள் கூடுதல் அழகுதரும். ஷிபான் மெட்டீரியலில் அமைந்த ஒன் பீஸ் உடை, கர்ப்பிணிகளுக்கு அம்சமாக பொருந்தும்.
ரைப் டிரஸ்: ரைப் டிரஸ் வகைகள் கர்ப்பிணிகளுக்கு ரசனையான தோற்றத்தையும், சவுகரியத்தையும் தரும். கர்ப்பகாலத்தில் மட்டுமின்றி பிரசவத்திற்கு பின்பும் இதனை அணிந்து கொள்ளலாம். இது ஒருவகை அட்ஜஸ்ட்டபுள் டிரஸ் ஆகும். இது போல் டியூனிக் வகை உடைகளும் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது.
ஸ்கர்ட்: கர்ப்பிணிகள் சாதாரண நிலையில் அணிந்துகொள்ள ஸ்கர்ட் பயன்படுத்தலாம். வயிற்றுக்கு மேல் அணியும் விதத்திலான ஸ்கர்ட் நன்றாக இருக்கும். வயிறு பெரிதாகுவதற்கு ஏற்ப இதை பெரிதாக்கிக்கொள்ளும் வசதியும் இருக் கிறது. அதற்கு பொருத்தமாக டெனீம் ஜாக்கெட் அணிந்தால் அழகான தோற்றம் கிடைக்கும்.