டெல்லி: வங்கதேசம் மற்றும் ரோஹிங்கியாக்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய உதவுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டம் அமித்ஷா தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா, டெல்லி உள்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட், டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேசம் மற்றும் ரோஹிங்கியாக்களுக்கு உதவுவது தேசிய பாதுகாப்புக்கு எதிரானது. ஊடுருவல்காரர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கும், அவர்களின் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கும், அவர்கள் இங்கு தங்குவதற்கும் உதவும் முழு நெட்வொர்க்குக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சட்டவிரோத ஊடுருவல்காரர்களின் பிரச்சினை தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது. எனவே, அதைக் கடுமையாகக் கையாள வேண்டும். அவர்களை அடையாளம் கண்டு நாடு கடத்த வேண்டும். நகரத்தில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான கும்பல்களை இரக்கமின்றி ஒழிப்பது டெல்லி காவல்துறையின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தொடர்ந்து மோசமாக செயல்படும் காவல் நிலையங்கள் மற்றும் சப்-டிவிஷன்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள் வழக்குகளில் “மேல்-கீழ், கீழ்-மேல் அணுகுமுறை” மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போதைப்பொருள் வலையமைப்புகளை அகற்ற வேண்டும்,” என்றார்.