மும்பை: கேம் சேஞ்சர் படத்தில் நடித்த நடிகை கியாரா அத்வானி தான் கர்ப்பமாக இருப்பது குறித்து இணையத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘புக்லி’ என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, எம்.எஸ்.தோனி, பரத் எனும் நான், கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘செர்ஷா’ படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா உடன் நடித்திருந்தார்.
அப்போது, நடிகை கியாரா அத்வானிக்கும் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு காதல் ஏற்பட இருவரும் 2023-ம் ஆண்டு ஜெய்சால்மரில் திருமணம் செய்துகொண்டனர். சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், திருமணமாகி 2 ஆண்டு கடந்த நிலையில் கியாரா அத்வானி-சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதியினர் தங்களது முதல் குழந்தையை வரவேற்கக் காத்திருக்கிறார்கள்.
இதுதொடர்பாக, நடிகை கியாரா அத்வானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளார். குழந்தைகளின் காலணிகளை பதிவிட்ட கியாரா, “எங்களது வாழ்க்கையின் சிறந்த பரிசு. விரைவில் வரவிருக்கிறது” என கூறியுள்ளார்.
கியாரா-சித்தார்த் தம்பதிகளுக்கு பல்வேறு நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.