சென்னை: தமிழ்நாடு அரசு, முதன்முறையாக மாநில நிதி நிலை தொடர்பான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. வரும் 14ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், நாளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பட்ஜெட்டில் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகள் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் சமர்ப்பிக்கும் நாளான 14ம் தேதி, முதன்முறையாக தமிழக அரசு பொருளாதார ஆய்வறிக்கையையும் சமர்ப்பிக்கிறது. இந்த பொருளாதார ஆய்வறிக்கையில், மாநிலத்தின் நிதி நிலை, உள்நாட்டு உற்பத்தி, நடைமுறையில் உள்ள திட்டங்களின் நிலை, மற்றும் எதிர்கால நிதி நிலை தொடர்பான விவரங்கள் இடம்பெறும்.
தமிழ்நாடு பட்ஜெட்டில், மகளிர் உரிமை தொகையை உயர்த்துவது பற்றிய அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளது. தற்போது, தமிழ்நாட்டில் மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது, ஆனால் அதே தொகை கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் டெல்லியில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் இந்த தொகையை உயர்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றும், தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து சமீபத்தில் கூட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. 01.04.2003 ஆம் தேதி பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்த திட்டத்தை பழைய ஓய்வூதிய திட்டமாக மாற்ற வேண்டும் என்று அரசுப் பணியாளர்கள் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
மேலும், 24.01.2025 அன்று ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனால, தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக விரிவான ஆய்வு நடக்கும் என்று கூறப்படுகிறது.