மும்பை: இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சன் (82), பான் இந்தியா படமான ‘கல்கி 2898 கிபி’ மற்றும் ரஜினிகாந்த் நடித்த தமிழ் படமான ‘வேட்டையன்’ ஆகியவற்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள இவர், விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ளார். சமீபத்தில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்தார்.
இந்த வயதிலும் இளம் நடிகர்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் அவர், தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவைப் படித்த அமிதாப் பச்சனின் ரசிகர்களும், நெட்டிசன்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். திரையுலகில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அவர் கூறியதாக பலர் கூறினர்.
இதையறிந்த அமிதாப் பச்சன், “நான் போக வேண்டிய நேரம் இது என்று பதிவிட்டதில் என்ன தவறு? நான் படப்பிடிப்பிற்குச் செல்லும் நேரம் இது என்பதுதான் அந்தப் பதிவின் உண்மையான அர்த்தம்” என்றார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.