மத்திய அரசு சமீபத்தில் பாஸ்போர்ட் விதிகளில் புதிய திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்துடன், புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் விதிகளில் செய்யப்பட்ட இந்த மாற்றங்கள், பாதுகாப்பு மற்றும் செயல்திறனைக் குறித்த பலவகையான மேம்பாடுகளை நோக்கமாக கொண்டதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இவை பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு தடையற்ற மற்றும் சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் இருக்கின்றன.

புதிய விதிமுறைகளின் படி, அக்டோபர் 1, 2023-ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்த விண்ணப்பதாரர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் மட்டுமே பிறந்த தேதிக்கான அங்கீகாரம் வழங்கப்படும். இந்த மாற்றம் பிறப்புச் சான்றிதழின் மூலம் மட்டுமே பிறந்த தேதியை உறுதி செய்யும் வகையில் அமுல் ஆகும். அக்டோபர் 1, 2023-க்கு முன்னர் பிறந்தவர்கள், பிறப்புச் சான்றிதழ், பள்ளி விடுப்பு, மெட்ரிகுலேஷன் சான்றிதழ், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் அல்லது சேவைப் பதிவின் நகல் உள்ளிட்ட பிற ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.
மேலும், பாஸ்போர்ட்டின் கடைசிப் பக்கத்தில் விண்ணப்பதாரரின் குடியிருப்பு முகவரியை அச்சிடுவதை மாற்றி, பாஸ்போர்ட்டில் பார்கோடு அச்சிடப்பட இருக்கும். இது ஸ்கேன் செய்து முகவரியைக் கண்டறிய அதிகாரிகளுக்கு உதவும்.
பாஸ்போர்ட்டின் அடையாளம் மற்றும் வகைகளை எளிதாக அறிவதற்காக கலர் கோடிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்படி, தூதர்களுக்கு சிவப்பு நிற பாஸ்போர்ட்டு, அரசு அதிகாரிகளுக்கு வெள்ளை நிற பாஸ்போர்ட்டு மற்றும் சாதாரண குடிமக்களுக்கு நீல நிற பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன.
இவை தவிர, பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் பெற்றோரின் பெயர்கள் பாஸ்போர்ட்டின் கடைசிப் பக்கத்தில் இனி அச்சிடப்படமாட்டாது. இந்த புதிய மாற்றம் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இருக்கும்.
பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்களின் எண்ணிக்கையும் விரிவுபடுத்தப்பட உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்கள் 442-இல் இருந்து 600-ஆக அதிகரிக்கப் போகின்றன.
இந்த புதிய திருத்தங்கள் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு பயனுள்ள அனுபவத்தை வழங்கும் என அரசு நம்பிக்கையுடன் உள்ளது.