லாகூர்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடந்த 2-வது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்கா வெளியேறியது. 363 ரன்கள் இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்க அணியால் 312 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டேவிட் மில்லர் தனி ஒருவராகப் போராடி 67 பந்துகளில் சதம் விளாசினார், ஆனால் அது அவர்களின் வெற்றிக்கு உதவவில்லை. இந்நிலையில் இந்த தொடரில் ஓய்வின்றி தனது அணி துபாய் சென்று பின்னர் பாகிஸ்தானுக்கு செல்வது நல்ல யோசனையல்ல என டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி தனது அனைத்து லீக் ஆட்டங்களிலும் பாகிஸ்தானில் விளையாடியது. அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தாலும், குரூப் ‘ஏ’ பிரிவில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய கடைசி போட்டியின் முடிவு தெரிந்த பிறகே அரையிறுதியில் யாரை எதிர்கொள்வது என்பது முடிவு செய்யப்படும் சூழ்நிலை. லீக் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்து அரையிறுதிப் போட்டிகள் செவ்வாய்கிழமை தொடங்க இருந்த நிலையில், குரூப் பியில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் துபாய்க்கு பயணம் செய்தன.

அவர்களில் ஒருவர் மட்டுமே துபாயில் நடந்த அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்திய அணி லீக் சுற்றை முதல் இடத்துடன் முடித்ததால், தென்னாப்பிரிக்க அணி அங்கு சென்ற வேகத்தில் பாகிஸ்தான் அணிக்குத் திரும்பியது. அதாவது, கராச்சியில் கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, அதிகாலையில் புறப்பட்டு துபாய் சென்றது. இதையடுத்து இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தது, தென்னாப்பிரிக்க அணி உடனடியாக இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடைபெறும் பாகிஸ்தானுக்கு புறப்பட்டது.
இதுபோன்ற போட்டி அட்டவணை ஏமாற்றமளிப்பதாக டேவிட் மில்லர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- அது ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் மட்டுமே விமான நேரம். ஆனால் நாங்கள் அதை செய்ய வேண்டியிருந்தது. எங்கள் கடைசி லீக் போட்டியை இரவில் முடித்துவிட்டு அதிகாலையில் துபாய் கிளம்பினோம். அதிகாலை 4 மணிக்கு துபாய் சென்றடைந்தோம். பின்னர் மறுநாள் காலை 7.30 மணிக்கு மீண்டும் பாகிஸ்தானுக்கு புறப்பட்டோம்.
5 மணி நேரப் பயணத்தால் எங்களுக்கு புத்துணர்ச்சியடைய நேரமில்லை. அது ஒரு சிறந்த சூழ்நிலையாக இருக்கவில்லை. இறுதிப்போட்டியில் விளையாடும் இந்தியா, நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் சிறப்பானவை. இந்தியா சிறந்த அணி என்பதை உலகுக்குக் காட்டியுள்ளது. அவர்கள் பல ஆண்டுகளாக சிறந்த கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். அவர்கள் அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர். இறுதிப் போட்டி சிறப்பாக இருக்கும்.
நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில், பேட்டிங்கில் நல்ல அடித்தளம் கிடைத்தது. துரதிஷ்டவசமாக ஆட்டத்தின் நடுவில் மேலும் 2 விக்கெட்டுகளை இழந்தோம். அனைவரும் தங்களால் இயன்றதைச் செய்ய முயன்றனர். இந்தியாவுக்கு எதிராக மீண்டும் விளையாடினால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் வாழ்க்கை சில நேரங்களில் நியாயமானதாக இருக்காது. கோப்பையை வெல்ல வேண்டுமானால் கடுமையாக உழைக்க வேண்டும். உண்மையைச் சொல்வதென்றால், இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை ஆதரிப்பேன். இவ்வாறு டேவிட் மில்லர் கூறினார்.