நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஓம்பகதூர் என்ற எஸ்டேட் காவலாளி கொல்லப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு மற்றும் எஸ்டேட் ஊழியர் தற்கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கொள்ளை தகவல் எப்படி கிடைத்தது, தகவல் வர எவ்வளவு நேரம் ஆனது, யார் சொன்னார்கள், சிசிடிவி கேமராக்கள் எப்படி வேலை செய்தன, காணாமல் போன பொருட்கள் என்ன, எஸ்டேட் வளாகத்தில் அடிக்கடி செல்வோர் யார், தொழிலாளிகளின் நடமாட்டம் போன்றவை குறித்து போலீசார் விசாரித்தனர். விசாரணைக்கு பின் சிபிசிஐடி போலீசார் அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.