சென்னை: இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் 1,000-க்கும் மேற்பட்ட கோயில்கள் வருமானம் ஈட்டி வருகின்றன. சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி., 2017-ல் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, கோவில்களுக்கு, மதம் சார்ந்து, மக்களுக்கு சேவை செய்வதால், விலக்கு அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு, ஜிஎஸ்டி வசூலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக, குத்தகைதாரரிடமிருந்து பெறும் வாடகை வருமானத்தில் உரிமையாளர் 18 சதவீத ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
இதன் அடிப்படையில் கோயில்களும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பிரசாதம், தரிசனக் கட்டணம், தங்குமிடம் போன்றவை கோயில்களில் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகள். இதை சேவையாக வழங்குவதாக கோயில் நிர்வாகம் கூறினாலும், சந்தை மதிப்பை ஒப்பிடும்போது ஒரே மாதிரியான கட்டணம் மற்றும் விலை என்பதால் ஜிஎஸ்டியை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சில முக்கிய கோவில்களுக்கு பல்வேறு இடங்களில் பல கோடி மதிப்புள்ள நிலங்கள் உள்ளன. பல ஏக்கர் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் கோவில் நிர்வாகங்கள் வருமானம் ஈட்டுவதால், இவற்றின் மீதும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். 2017-ல் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இதுவரை வரி கட்டவில்லை என்றும், எட்டு ஆண்டுகளாக ஒவ்வொரு கோவிலுக்கும் வரி கட்டாததால், ஒவ்வொரு கோவிலுக்கும் பல லட்சம் முதல் பல கோடி ரூபாய் வரை வரியும், அதற்கு வரியும் அபராதமும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த அறநிலையத் துறையினர், ‘கோயில் மத ரீதியாகவும், பக்தர்கள் அளிக்கும் காணிக்கையின் அடிப்படையிலும் செயல்பட முடியும். இது வணிக நோக்கத்துடன் செயல்படவில்லை’ என, ஜிஎஸ்டி அதிகாரிகளிடம் விளக்குவது குறித்து பரிசீலித்து வருகிறது.