திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய திருவிழாவான தேர் திருவிழா, 7-ம் நாளான நேற்று வெகு விமரிசையாக நடந்தது. காலை 7:00 மணிக்கு உற்சவ கந்தனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, கந்த பகவான் சிறப்பு அலங்காரத்தில், அரோகரா கோஷமிட்ட பக்தர்களின் வெள்ளத்துடன் கோவிலில் இருந்து தேருக்கு புறப்பட்டார்.
கந்த பகவான், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். பின்னர் கந்த பகவான் அலங்கரிக்கப்பட்ட தேரில் வலம் வந்தார். 9:30 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இழுத்து தேர் ஊர்வலம் துவங்கியது. தேர், 4 மாடவீதிகள் வழியாக, மாலை, 3:00 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. தேர் திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம், தண்ணீர், மோர், பழச்சாறுகள் வழங்கப்பட்டன.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து பக்தி பரவசத்துடன் கந்தனை வழிபட்டனர். விழா மற்றும் ஏற்பாடுகளை கந்தசுவாமி கோவில் செயல் அலுவலர் குமரவேல், மேலாளர் வெற்றிவேல் மற்றும் பணியாளர்கள் குழுவினர் செய்திருந்தனர். விழாவையொட்டி 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து இன்று மாலை ஆலத்தூர் கிராமத்தில் முக்கிய விழாவும், 12-ம் தேதி இரவு 7:00 மணிக்கு தெப்ப உற்சவமும், 15-ம் தேதி காலை 7:30 மணிக்கு திருகல்யாண உற்சவமும் நடக்கிறது.