ஒவ்வொரு ஆண்டும் வெப்பம் மேலும் அதிகரித்து வருவது மனித உடலின் உடல் ஆரோக்கியத்திற்கு தீவிர பிரச்சினைகளையும், உடல் மாற்றங்களையும் உருவாக்குகிறது. உலகெங்கும் உள்ள நாடுகள், சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது மிகவும் உயர்ந்த வெப்பநிலையை எதிர்கொள்கின்றன. குறிப்பாக, கோடை காலங்களில் கடுமையான வெப்ப அலைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். வெப்பத்தின் அதிகரிப்பு நம்மை சோர்வாகவும், எரிச்சலுடனும் உணர வைக்கிறது. ஆனால் சமீபத்திய ஆய்வுகளின் படி, வெப்பம் நம்மை அசௌகரியமாக்குவதோடு, மற்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.

அமெரிக்காவில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வில், கடுமையான வெப்பத்தில் நீண்ட நேரம் இருப்பது, குறிப்பாக வயதானவர்களுக்கு, மிகவும் வேகமாக முதுமையடையும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, வெப்பமான இடங்களில் வாழும் நபர்களின் வயதான செயல்முறை வேகமாக நடப்பதாகவும், குறைந்த வெப்பநிலைகளில் வாழ்ந்தவர்களின் வயதான செயல்முறை மெதுவாக இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
நம் உடல் இயற்கையாகவே வயதாகிக் கொண்டிருப்பதைத் தவிர, வெப்பம், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற காரணங்கள் இந்த செயல்முறையை வேகப்படுத்துகின்றன. அதிக வெப்பம் நம்மை நோய்வாய்ப்படுத்தக் கூடும் மற்றும் உயிருக்கு ஆபத்தானதாகவும் இருக்க முடியும். மேலும், அதிக வெப்பநிலையில் நீண்ட நேரம் இருப்பது உடனடியாக பிரச்சனையை ஏற்படுத்தாவிட்டாலும், நம் உடலில் மன அழுத்தத்தை உருவாக்கும். இது முதுமை செயல்முறையை வேகப்படுத்துவதோடு, நோய்களுக்கு வழிவகுக்கின்றது.
அதிக வெப்பம் உடலின் DNA செயல்பாடுகளை பாதிக்கக்கூடும், இது வயதான செயல்முறையை தூண்டுகிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை மற்றும் காலநிலை மாற்றங்களின் காரணமாக, மனிதர்களின் DNA வை வேதியியல் ரீதியாக மாற்றம் செய்கிறது. இதனால், வெப்ப அழுத்தம் உடல் மரபணுக்களை இயக்குவதிலும் நிறுத்துவதிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில், அதிக வெப்பநிலையில் நீண்ட நேரம் இருப்பது, வயதான செயல்முறையை வேகப்படுத்துவதாக கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு 2010 முதல் 2016 வரை 6 ஆண்டுகள் நடத்தப்பட்டு, இதில் 68 வயதுடைய 3,700 பேர் பங்கேற்றனர். இதில், அதிக வெப்பம் DNAவில் உயிரியல் மாற்றங்களை ஏற்படுத்தி, நம்மை 2.48 ஆண்டுகள் முன்கூட்டியே முதுமை அடையச் செய்வதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.