கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லும் படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் நாளை ஆய்வு செய்கின்றனர். கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இந்த ஆண்டு மார்ச் 14 மற்றும் 15-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து 90 மோட்டார் படகுகளும், 22 நாட்டு படகுகளும் விழாக்குழுவினரிடம் பதிவு செய்துள்ளனர்.
மேலும், இந்த பதிவு செய்யப்பட்ட படகுகளில் திருவிழாவிற்கு செல்ல மொத்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நாளை கச்சத்தீவு செல்லும் மோட்டார் படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளில் படகின் நீளம், அகலம், உறுதித்தன்மை குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

திருவிழாவில் கலந்து கொள்ள பதிவு செய்துள்ள மோட்டார் படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளின் உரிமையாளர்கள் அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய வரும்போது படகின் அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருக்குமாறு மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.