மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உலகப் புகழ் பெற்ற ஆன்மீக மற்றும் சுற்றுலா தலமாகும். இக்கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். இதனால் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதுபோன்ற நேரங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற நேரங்களில் வரிசையில் நிற்கும் பக்தர்களில் முதியவர்கள், பெண்கள், நோயாளிகள் மற்றும் பலர் திடீரென மயங்கி விழுவது அடிக்கடி நடக்கிறது.
அவர்களில் சிலருக்கு மாரடைப்பு உட்பட பெரும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதுபோன்ற பிரச்னைகளை கருத்தில் கொண்டு மீனாட்சி அம்மன் கோவிலில் தனி ஆம்புலன்ஸ் மற்றும் முதலுதவி மையம், நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசை பொதுமக்கள், பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை கருணையுடன் பரிசீலித்த தமிழக அரசு, முதற்கட்டமாக ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து தீயணைப்பு நிலையம் கட்ட உத்தரவிட்டு, தற்போது கிழக்கு கோபுரம் பகுதியில் உள்ள வருவாய்த் துறை அலுவலகம் அருகே தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.

இதேபோல் கோயிலில் பக்தர்களுக்கான முதலுதவி சிகிச்சை மையமும் திறக்கப்பட்டது. மயங்கி விழும் பக்தர்களுக்கு முதலுதவி அளித்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ், 2 டாக்டர்கள், 2 செவிலியர்கள், 2 மருத்துவ உதவியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்த முதலுதவி மையத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கோவில் திறக்கும் நேரம் முழுவதும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இங்கு போதுமான மாத்திரைகளும் உள்ளன. உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டதால், இந்த முதலுதவி மையம் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கோயில் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கோயிலுக்கு வரும் பக்தர்களின் உடல் நலத்தைக் காக்கும் வகையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் 2022 டிசம்பர் 3 அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் முதலுதவி மையத்தை திறந்து வைத்தார். ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுவதால் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால், பக்தர்கள் அவ்வப்போது நோய்வாய்ப்பட்டு முதலுதவி மையத்தில் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்நிலையில், இந்த மையத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மண்டல இணை ஆணையர் மற்றும் கோயில் இணை ஆணையர் ஆகியோர் இணைந்து மையத்திற்கு தேவையான மருந்துகள் உள்ளிட்ட வசதிகளை செய்து வருகின்றனர். சித்திரை திருவிழா நெருங்கி வருவதால், முதன்முறையாக இந்த மையத்தில் கூடுதல் வசதிகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன,” என்றார்.