டெல்லி: மத்திய அரசு திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு கூட்டாட்சி கொள்கைக்கு எதிரானது என்று திமுக எம்பி கிரிராஜன் கூறியுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு குறித்து ராஜ்யசபாவில் பேசிய அவர், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு ஜனநாயகத்திற்கு எதிரானது என விமர்சித்தார். நாட்டின் நலனுக்காக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலத்திடம் இருந்து இடங்களின் எண்ணிக்கையைப் பறித்து, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தாத பிற மாநிலங்களுக்கு வழங்குவது நியாயமில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், “தொகுதி மறுசீரமைப்பால், மக்கள்தொகையை நன்கு கட்டுப்படுத்திய கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் பல இடங்களை இழக்கும். அதே நேரத்தில், மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் அதிக இடங்களைப் பெறும். மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு கூட்டாட்சி கொள்கைக்கு எதிரானது. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை ஒருபோதும் ஏற்க முடியாது,” என்றார்.