பி.எட், எம்.எட் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் (பொறுப்பு) பி.கணேசன் அனைத்து கல்விக் கல்லூரிகளின் (தன்னாட்சி கல்லூரிகள் நீங்கலாக) முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பி.எட், பி.எட் (சிறப்புக் கல்வி), எம்.எட் மற்றும் எம்.எட் (சிறப்புக் கல்வி) படித்து முதல் செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்களிடம் இருந்து ஆன்லைனில் தேர்வுக் கட்டணம் வசூல் செய்து செலுத்துவதற்கான கடைசி தேதி மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த காலக்கெடுவுக்குள் கட்டணம் செலுத்தத் தவறிய மாணவர்கள் மார்ச் 18ம் தேதி வரை அபராதக் கட்டணத்துடன் தேர்வுக் கட்டணத்தை வசூலித்து செலுத்த வேண்டும். பி.எட் மற்றும் பி.எட் (சிறப்புக் கல்வி) தேர்வுக் கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.200. எம்.எட் மற்றும் எம்.எட் (சிறப்புக் கல்வி) படிப்புகளுக்கு ஒரு தாளுக்கு ரூ.300.
இரண்டிற்கும் மதிப்பெண் சான்றிதழ் கட்டணம் தலா ரூ.100 ஆகவும், அபராதக் கட்டணம் ரூ.300 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மதிப்பெண் சான்றிதழ் கட்டணமாக ரூ.100 மட்டுமே செலுத்த வேண்டும். அதே சமயம் ஆரிய மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் விலக்கு இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.