அவிநாசி : அவிநாசிலிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு இன்று காலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு செய்தனர். கொங்கு நாட்டில் உள்ள ஏழு சிவன் கோவில்களில் கருணம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் உத்தராயண மாதங்களான மாசி மற்றும் பங்குனி மாதங்களில் சூரிய ஒளி அவிநாசிலிங்கேஸ்வரர் மீது படுவது வழக்கம்.

அப்போது சூரியபகவான் அவிநாசிலிங்கேஸ்வரரை வழிபட செல்வதாக ஐதீகம். இந்த ஆண்டு, சூரியன் உதிக்கும் நேரத்தில், பழமையான இக்கோயிலின் ராஜகோபுரத்தின் வழியாக சூரிய ஒளி ஊடுருவி, அவிநாசிலிங்கேஸ்வரர் மீது விழுந்து வழிபட்டது. அப்போது அவிநாசிலிங்கேஸ்வரர் தங்க நிறத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காலை 6.50 மணிக்கு தொடங்கி சுமார் 5 நிமிடங்களுக்கு மேல் சூரியனின் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது படிந்து படிப்படியாக மறையத் தொடங்கின. இந்நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வு ஓரிரு நாட்கள் காலை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.